AddThis

Bookmark and Share

September 25, 2008

வலி தீர வழி சொல் கண்மணி! ---நிலாரசிகன்

உன்னை என் மடியிலமர்த்தி கன்னத்துடன் கன்னம் உரசிக்கொண்டு கவிதைகள் வாசித்த பொழுதின் ஞாபகமிச்சங்கள் என்னுடைய எல்லா இரவுகளுக்கும் துணையாகின்றன..இரு கைகளில் உன்னை அள்ளியெடுக்க முயன்று உன் எடைதாளாமல், உன் பூமுகத்தை என் கைகளில்ஏந்தி நெற்றியில் ஒரு சிறுமுத்தமிட்ட கணத்தை சிற்பமென செதுக்கி வைத்திருக்கிறது யன்னல் வழியே நம்மை ரசித்த வெண்நிலா.திமிர்கொண்டு நீ உதிர்க்கும் சொற்களெல்லாம் எனைச் சேரும் முன்பே, திமிர்தொலைத்து நேசம்பொங்க ஓடிவந்து என்னைக் கட்டிக்கொள்வாய். கண்சிமிட்டும் நட்சத்திரங்களெல்லாம் வெட்கத்தில் இருளுக்குள் ஓடி மறையும்.நொடிக்கொரு முறை என் விரல்பற்றிக்கொண்டு குழந்தையாகி என் கண்களை உற்று நோக்குவாய். கண்களில் வழிகின்ற ப்ரியங்களில் உன் பெயர் மட்டுமே எழுதப்பட்டிருக்கும்.தடதடக்கும் ரயில்கள் நம்மைக் கடந்து சென்ற ஓர் அந்தியில் ரயில்நிலைத்தில் அமர்ந்திருந்தோம். சொல்லிவிட விரும்பாத காரணத்தால் அழுதாய் நீ. ரணமின்றி காதலில்லை என்றேன் நான். கனத்த நெஞ்சுடன் மேற்கில் சென்று விழுந்தது சூரியன்.உனக்கென மலர்ந்த என் வீட்டு ரோஜா இனி யாருக்கு பூக்கும்? நீ வசித்த என் இதயவீட்டில் இனி யாருக்கு இடமிருக்கும்? பிறந்த மண்ணைப் பிரிகின்ற அகதிக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம். அவன் தேசமில்லா அகதி. நான் நேசமில்லா அகதி.வலிகொண்ட என் காதல்நதி உன் ஞாபகக்கடலை சுமந்துகொண்டு திசை அறியாமல் தடுமாறிச் செல்கிறது.நீயும் நானும் மறந்துவிட்ட என்னை நாம் நடந்த சாலையோர சிறுபூக்கள் இன்னும் நினைவு வைத்திருக்கிறது.உன் சிறகில் கேட்கிறது பிரிவின் சத்தம். என் சிறகில் வழிகிறது காதல்ரத்தம். வீழ்த்தப்பட்ட ஒற்றைப்பறவை என்னிடம் இனி எதுவுமில்லை மிச்சம்.யாருக்கோ மலர்கின்ற என் புன்னகையினுள்ளே வலிமிகுந்த காதலொன்று துடிதுடித்துக்கொண்டிருக்கிறது. யாருக்கோ மலர்கின்ற உன் புன்னகையினுள்ளே கல்லறையாய் எழுந்து நிற்கிறது நம் உயிர்ப்புள்ளகாதல்.

0 comments: